விபத்துகளும் முதலுதவியும்

>> Sunday, October 19, 2008


இன்றைய வாழ்வில் அடிக்கடி விபத்துகள் நேர்கின்றன. கையில் கத்தி போன்ற ஆயுதங்கள் பட்டு காயம் ஏற்படுவது, தீப்பட்டு புண்கள் ஏற்பட்டுவது , மின்சாரம் போன்றவற்றால் தாக்கப்பட்டு மூர்ச்ச்சை அடைவது, தவறியோ வேண்டுமென்றோ சாப்பிடக்குடாத பொருள்களைச் சாப்பிட்டு விடுவது, நீரில் மூழ்கி விடுவது இப்படி எத்தனையோ விபத்துகள் அன்றாட வாழ்வில் நிகழ்ந்து வருகின்றன. அவை சிறியவைகளாகவோ, பெரியவைகளாகவோ இருக்கலாம். இவற்றால் காயங்களும் ,அதிர்ச்சியும் , ஆபத்தும் ஏற்படுகின்றன. காயங்கள் மிகச்சிறியவையாகவும் சாதாரணமானவையாகவும் இருக்கலாம். சில நேரங்களில் அவை பலத்தவையாகவும் , உயிருக்கே ஆபத்து விளைவிக்க கூடியவையாகவும் இருக்க கூடும். விபத்து ஏற்பட்டதும் செய்வது அறியாது திகைத்து நிற்கலாகாது. முறை தெரியாமல் சிகிச்சை அளிக்க முயன்றால் அது ஆபத்தில் முடியக் கூடும். எனவே முதல் உதவி பற்றித் தெரிந்து கொள்வது நல்லது. விபத்துக்கு உள்ளானவருக்கு உடனடியாகவும் , மருத்துவரின் உதவி கிடைக்கும் வரையிலும் முதல் உதவி சிகிச்சை அளிப்பது அவசியமாகும்.

ஒவ்வொருவரும் முதல் உதவியைப் பற்றித் தெரிந்து வைத்துக் கொள்வது எவ்வளவு முக்கியமோ , அதேபோல ஒவ்வொரு வீட்டிலும் முதல் உதவிப் பெட்டி ஒன்று இருப்பதும் முக்கியம். ஆனால் நம்மில் ஒரு சிலரின் வீடுகளில் தான் அதிசயமாக முதல் உதவிப் பெட்டியைக் காண முடிகிறது. பெரும்பாலனவர்களின் வீடுகளின் மூதல் உதவி பெட்டீயோ அல்லது அதற்குத் தேவையான பொருட்கள் இருப்பதில்லை. வாகனங்களிலும் , பள்ளி போன்ற இடங்களிலும் முதல் உதவி பெட்டி இருப்பது அவசியம்.

முதல் உதவிப் பெட்டியில் வேண்டியவை
௧. ஒரங்குல பிளாஸ்திரிச் சுருள்
௨. மூன்றங்குல சதுரக் காரத் துணிகள்
௩. கிருமி நிக்கப்பட்ட பலவகை கட்டுத் துணிகள்
௪. முக்கோணக் கட்டுத் துணிகள்
௫. இரண்டு முழச் சதுரக் காரத் துணிகள்
௬. தீப்புண்ணுக்கு இடும் களிம்பு
(அமிலக் களிம்பு சிறந்தது)
௭. அமோனிய சாராயக் கரைசல்
(ரப்பர் அடைப்பான் இட்ட பாட்டிலில்)
௮. ௨ சதவிகித அயோடின் கரைசல்
(ரப்பர் அடைப்பான் இட்ட பாட்டிலில்)
௯. இழுக்க நீளாத முறுக்குக் கட்டுத்துணி
௧0. கத்தரிக்கோல்
௧௧. ௩ அங்குல நீளமுள்ள பிளவு சிம்புகள்
௧௨. ௧ அங்குலம், ௨ அங்குலம் அகலம் உள்ள கட்டுத்
துணிகள்
௧௩. கண்ணுக்குப் பயன்படுத்தக்கூடிய கிருமி நீக்கம்
செய்யப்பட்ட விளக்கெண்ணெய் அல்லது ஏதாவது
கனிய எண்ணெய் (குழாய்களில் இருக்க வேண்டும்)
௧௪. போரிக் அமிலக் கரைசல்
௧௫. சமையலுக்குப் பயன்படுத்தப்படும் சாதாரண
உப்பு குறைந்தது ௧ பவுண்டு (ஈரம்
இல்லாதிருக்க வேண்டும்.

விபத்து நடந்தவுடன் கவனிக்க வேண்டியவை

௧. விபத்து நடந்ததும், விபத்துக்குள்ளானவர் சுவாசிக்கப் போதுமான காற்றுக்கூட விடாமல் பலர் சூழ்ந்து கொண்டு கூச்சலிட்டு குழப்பத்தை அதிகமாக்குகிறாகள். இது தவிர்க்கப்பட வேண்டும். இத்தகையவர்களை விலக்கிவிட்டு, நிலைமையைப் புரிந்து கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதை உடனே முடிவு செய்ய வேண்டும்.

௨. நீங்கள் அளிப்பது முதல் உதவிதானே ஒழிய முழுச் சிகிச்சையல்ல. எனவே விரைவாக மருந்துவருக்கு ஆள் அனுப்ப வேண்டும். நீங்கள் அனுப்பும் ஆளிடம் என்ன நடந்தது விபத்துக்குள்ளானவரின் தற்போதைய நிலை என்ன , என்னென்ன குறிகள் காணப்படுகின்றன என்பதைச் சொல்லி அனுப்ப வேண்டும். தேவையிருந்தால் குறிப்பெழுதி கொடுத்தனுப்ப வேண்டும். அப்போது தான் டாக்டர் அதற்கேற்ப மருந்துகளையும் , கருவிகளையும் கொண்டுவர முடியும். டாக்டரின் மருந்துப் பெட்டி ஒரு முழு மருத்துவமனையல்ல. எனவே எல்லா கருவிகளையும் அவர் சுமந்து கொண்டு வரவும் முடியாது. என்ன நடந்திருக்கிறது அல்லது எந்த வகை சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை டாக்டர் அறியவும், அதற்கேற்ப கருவிகளையும், மருந்துகளையும் அவர் கொண்டுவரவும் நீங்கள் அனுப்பவும் தகவல்கள் உதவ வேண்டும்.

௩.விபத்துகள் நேரும்போது நோயாளிக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டிருக்கலாம்: அவர் பல வகையில் பாதிக்கப்பட்டிருக்கலாம். எந்தக் காயத்தால் அதிக ஆபத்து ஏற்பட உள்ளதோ அதற்கு முதலில் முதலுதவி அளிக்க முயல வேண்டும். அற்ப காயங்களுக்கு முதலிடம் கொடுத்து முக்கிய காயங்களுக்கு முதல் உதவி செய்வதைத் தாமதப்படுத்தக் கூடாது.ஆபத்து நேரங்களில் பின்கண்ட விஶயங்களில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.: அ) மூச்சுத் திணறல் , ஆ)அதிர்ச்சி, இ) இரத்தபோக்கு, ஈ) மயங்கி மூர்ச்சையாதல்.

௪. சுய நினைவு இழந்தவர்களுளூக்கு வாய் வழியாக எதுவும் கொடுக்கக் கூடாது.

௫. தரையில் விழுந்து கிடக்கும் நோயாளியின் உடலில் உள்ள வெப்பம் வெகு விரைவில் தரைக்குச் சென்று விடும். எனவே , நோயாளியை ஏதாவது படுக்கையில் படுக்க வைத்து சூடு தணியாமல் போர்வையாலோ , கம்பளியாகவோ உடலை மூட வேண்டும்.

டாக்டர் நோயாளிக்கு தரும் முதல் டானிக் தைரியம் தான். முதலுதவி செய்பவருக்கும் இது பொருந்தும். பாதிக்கப்பட்டவர் எவ்வளவு ஆபத்தான நிலையில் இருந்தாலும் அவர் நம்பிக்கை இழக்காமல் பார்த்துக் க் கொள்ள வேண்டும். சுற்றியிருப்போர் அழுவதும் , முதலுதவி செய்பவர் நம்பிக்கை இழந்தவராகக் காணப்படுவதும் நோயாளிக்கு பயத்தை ஏற்படுத்தலாம். அல்லது பயத்தை அதிகமாக்கலாம். நீங்கள் தரும் நம்பிக்கையே நோயாளியைக் காப்பாற்ற அதிகம் உதவும் என்பதை மறக்கக் கூடாது.

கட்டுப் போடுதல்
காயங்களுக்குக் கட்டுப்போட வேண்டும். காயம் கடுமையானதாக இருக்கும் போதும், எலும்பு முறிவோ, மூட்டு நழுவுதலோ, மூட்டூப் பிறழ்ச்சியோ ஏற்படும் போதும் கட்டுப் போடுவது மிகவும் அவசியமாகிறது.

மருந்துத் துணிகள் , பற்றுகள், சிம்புகள் போன்றவை குறிப்பிட்ட இடத்திலிருந்து நழுவாமல் இருக்கவும், அங்கம் திசுக்களுக்கு ஆதரவு அளிக்கவும் , அங்கக் குறைபாட்டைச் சீர்படுத்தவும் , இரத்த வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தவும், வீக்கம் ஏற்படாமல் தடுக்க அல்லது வீக்கத்தைக் குறைக்கவும், அங்கம் அல்லது உறுப்பின் இயக்கத்திற்கு எல்லை வகுக்கவும் கட்டுக்கட்டுதல் கடைப்ப்டிக்கப் படுகிறது.

எந்தெந்த இடத்தில் எந்தெந்த வகைக் கட்டுகளைப் பயன்படுத்த வேண்டும் என அறிந்திருப்பது அவசியம். சுத்தமான பஞ்சு , துணி ஆகியவற்றையே கட்டுப்போட பயன்படுத்த ~வேண்டும். அசுத்தமான துணியால் கட்டுப்போட்டால் அதிலுள்ள கிருமிகள் காயங்களின் வழியே உடலினுள் சென்று தீங்கு விளைவிக்கலாம். கட்டுக் கட்ட பயன்படுத்தப்படும் துணி, பஞ்சு போன்றவற்றை நீராவியில் வேகவைத்து தூய்மையாக்கி, சுத்தமான காகிதம் அல்லது துணியில் சுற்றி வைக்க வேண்டும்.

கட்டுத் துணிகளில் சுருள் கட்டுத்துணி, முக்கோண வடிவத்துணி, பல முனை கொண்டது போன்ற சிறப்பு வகைகள் பலவும் உண்டு.

Read more...

Back to TOP